சர்வதேச தண்ணீர் தினம் – 2010
கருப்பொருள்: ஆரோக்கியமான உலகிற்கு சுத்தமான நீர்
ரியோடிஜெனிரோவில் 1992ம் ஆண்டு நடந்த சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் (UNCED) தொடர் முயற்சியாக, சர்வதேச தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. “ஆரோக்கியமான உலகிற்கு சுத்தமான நீர்" (Clean water for a healthy world) என்ற கருப்பொருளுடன் 2010ம் ஆண்டு, இது கொண்டாடப்படுகிறது.
பூமியின் 70% த்திற்கு மேலான பரப்பளவு நீரால் நிரம்பியுள்ளது. ஆனால், இதில் ஒரு சிறு பகுதி மட்டுமே நன்னீராக இருக்கிறது. உலகிலுள்ள மொத்த நீரில், 2.7 சதவீதம் மட்டுமே நன்னீராக உள்ளது; அதிலும், 75.2 சதவீதம் துருவப் பிரதேசங்களில் பனிகட்டிகளாகவும், 22.6 சதவீதம் நிலத்தடி நீராகவும் உள்ளது. மீதம் உள்ள பகுதி மட்டுமே, ஏரிகள், ஆறுகள், வெளிமண்டல ஈரப்பதம், மண் மற்றும் உயிரினங்களில் காணப்படுகிறது. இதிலும் பயன்பாட்டுக்கு தகுதியுள்ள நீரின் அளவு மிகவும் குறைவு. உலகின் மொத்த நன்னீரில் ஒரு சதவீதத்திற்கும் (அல்லது, உலகின் மொத்த நீரில் 0.007 சதவீதம்) மட்டுமே மனித உபயோகத்திற்கு நேரடியாக பயன்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் தினசரி 30 முதல் 40 லிட்டர் வரை சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீர் தேவைப்படுகிறது. எனினும், 884 மில்லியன் மக்களுக்கு அவ்வாறு நீர் கிடைப்பது கடினமாக உள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 1500 கன கிலோமீட்டர் அளவு கழிவுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை உபயோகமான வழியில் எரிசக்தி உற்பத்தி மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்த முடியுமென்றாலும், வழக்கமாக அவ்வாறு செய்யப்படுவதில்லை. வளரும் நாடுகளில், 80 சதவீதத்திற்கும் மேலான கழிவு நீர், போதுமான கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகள் இல்லாத காரணங்களால், சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே வெளியேற்றப்படுகின்றன. மக்கள் தொகையும், தொழில்துறையும் வேகமாக வளர்ச்சியடைவதால், சுத்தமான நீருக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலத்திற்கு, குடிப்பதற்கு மற்றும் பாசனத்திற்கான தற்போதைய மற்றும் எதிர்கால நீர் தேவைகளை பூர்த்தி செய்வது பெறும் கேள்விக்குறியாக உள்ள போதும், நீர் மாசுபாடு என்பது ஒரு முக்கியப் பிரச்சினையாக கவனிக்கப்படுவதில்லை.
மூலம்: www.worldwaterday2010.info


