ஓஸோனும் சுற்றுச் சூழலும்

ஓஸோன் என்பது என்ன?
ஓஸோன் ஆக்ஸிஜனின் (பிரான வாயு) ஒரு வடிவம். ஆனால் ஆக்ஸிஜன் போல் அல்லாமல் இது ஒரு விஷ வாயு. ஒவ்வொரு ஓஸோன் மூலக்கூறும் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டது. இதனுடைய வேதியியல் சூத்திரம் O3. வாயு மண்டலத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் (O2) மேல்புற ஊதாக் கதிர்கள் படுவதால் அவை பிரிகின்றன. இப்படிப் பிரிந்த ஆக்ஸிஜன் அணு (O) பிரியாமல் இருக்கும் மற்றொரு ஆக்ஸிஜன் மூலக்கூறுடன் மோதுகிறது. இந்த மூன்று ஆக்ஸிஜன் அணுக்களும் சேர்வதால் ஓஸோன் (O3 ) உருவாகிறது.


நல்ல ஓஸோனும் கெட்ட ஓஸோனும்

பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 15 -50 கி.மீ. தூரத்தில் ஸ்ட்ரேடோஸ்பியர் படலம் உள்ளது. வாயு மண்டலத்தின் இப்படலத்தில் தான் இயற்கையாகவே ஓஸோன் படலம் அமைந்துள்ளது. இது சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வந்து சேராமல்  தடுக்கிறது. அதன் மூலம் உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன.

பூமியின் மேற்பரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ள வாயு மண்டலப் படலம், வாகனங்களினால் உண்டாகும் புகை, நைட்ரஜன்ஆக்ஸைடுகள் மற்றும் ஹைட்ரோ கார்பன்கள் இவற்றின் அளவுகள் அதிகரிப்பதால் மாசுபடுகிறது. சூரிய ஒளி இருக்கும் போது, இந்த வேதிப்பொருட்கள் ஓஸோனை உருவாக்குகின்றன. இந்த ஓஸோன், இருமல், தொண்டை எரிச்சல், ஆஸ்மாவை, போன்ற நோய்களை உண்டாக்குகின்றன. இவை பயிர்களுக்கும் ஊறு விளைவிக்கக்கூடியவை. ஸ்ட்ரேடோஸ்பியர் படலத்தில் இருக்கும் ஓஸோன் புறஊதாக் கதிர்களை பூமிக்கு வராமல் தடுத்து நிறுத்தி நன்மை விளைவிக்கும். அதே நேரத்தில், வாயுமண்டலத்தின் கீழ்மட்டம் மாசுபடுவதால் ஏற்படும் ஓஸோன், உடல் நலக்கேட்டை அதிகரிக்கிறது.



ஓஸோன் டிப்ளேஷன் என்றால் என்ன?
க்ளோரோ-ஃப்ளோரோ கார்பன்கள் (CFCs) நல்ல ஓஸோனை அழிக்கும் முதன்மை வேதிப்பொருள். இவை குளிர்சாதனப் பெட்டி, ஏர் கண்டிஷனர்கள் முதலியவற்றில் குளிரூட்டப் பயன்படுபவை. இவற்றில் க்ளோரின் அடங்கியுள்ளது.
நண்மை தரும் ஓஸோன் படலம் அழிக்கப்படும் முறை

முதல் கட்டம் : மனித சமுதாய முயற்சியால் உருவாக்கப்படும் இந்த சி.எஃப்.சிக்கள் வெளிமண்டலத்தில் உள்ள ஓஸோன் படலத்தை எட்டுதல்.

இரண்டாவது கட்டம்: சூரியனிலிருந்து வெளிப்படும் அக ஊதா கதிர் வீச்சு சி.எஃப்சிக்களைத் தகர்த்து க்ளோரினை வெளிப்படுத்துகின்றன.

மூன்றாவது கட்டம்: க்ளோரின் அணுத்துகள்கள் ஓஸோன் கூறுகளை உடைப்பதை அடுத்து, ஓஸோன் படலம் அழிக்கப்படுதல்.


ஓஸோன் படலம் அழிக்கப்படுவது நம்மை எப்படி பாதிக்கிறது?
ஓஸோன் படலம் அழிக்கப்படும்போது, சூரிய ஒளியிலிருந்து வெளிக்கிளம்பும் புற ஊதாக் கதிர்கள் பூமியைத் தாக்குவது அதிகரிக்கிறது. இவற்றால் மரபணுக்கள் பாதிக்கப்படுதல், கண்களில் பாதிப்பு மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.



Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: