வேலைக்குப் போகும் இந்தியப் பெண்களில் 68% பேர் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள்
வேலைக்குப் போகும் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தாங்கள் வாழும் வாழ்க்கை முறையினால் நோய்க்கு ஆளாகன்றனர். அவர்களில் 53 சதவிகிதம் பேர் சரியான வேளையில் உணவு உண்ணாமல் வேலைப் பளுவாலும் வெறுமையினாலும் சுகாதாரமற்ற உணவு வகைகளை (Junk Food) உண்கிறார்கள்.
அசோஸியேடட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இன்டஸ்ட்ரி (அஸோசேம்) இணைந்து நடத்திய ஒரு சர்வேயின்படி 21-52 வயதுக்குள் இருக்கும் வேலைக்குப் போகும் பெண்கள், உடல் பருமன், மன அழுத்தம், நீண்டகால முதுகு வலி, சர்க்கரை நோய் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகிய வாழ்க்கை முறையினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நகர்ப்புற பெண்களில் 27 சதவிகிதம் பேர் வேலை பார்க்கும் பெண்கள். அவர்களுடைய உடல்நலப் பிரச்சினைகள் சமுதாயத்திற்கும் தொழில்களுக்கும்கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளன என்று அந்த சர்வே ரிப்போர்ட் மேலும் கூறுகிறது.
'பிரிவென்டிவ் வொர்க் கேர் & கார்ப்பொரேட் வொர்க் ஃபோர்ஸ்' அறிக்கை, நீண்ட வேலை நேரம் மற்றும் வேலையை முடிப்பதற்கான கடுமையான காலக்கெடு போன்ற சூழ்நிலைகளில் வேலை பார்க்கும் 75 சதவிகிதம் பெண்கள், மனஅழுத்தத்தைக் கொடுக்காத வேலைகளில் இருக்கும் பெண்களைவிட மனநோய் மற்றும் மன உளைச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் கூறுகிறது.
மேலும் இந்த அறிக்கை, தகவல் தொடர்பு, அறிவுசார் நடவடிக்கைகள், அவுட்சோர்ஸிங் மற்றும் சுற்றுலாத் துறை போன்ற அதிக நேரம் தேவைப்படும் துறைகளில் வேலைபார்க்கும் பெண்கள் உடல்நலக் குறைவால் விடுப்பு எடுக்க இயலாமை, வேலைப் பாதுகாப்பின்மை, குறிப்பாக, நடப்பு பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் வேறுவழியில்லாமல் தம்மைத் தாமே வருத்திக்கொண்டு வேலை செய்கிறார்கள்... என்று மேலும் கூறுகிறது.
இவை தவிர தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு, சுற்றுப்புற சூழலில் உள்ள நச்சுத் தன்மை, சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சி குறைவு, சூரிய ஒளியினால் உண்டாகும் அதிக வெப்பம், குடி மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்றவையும்கூட இப்படிப்பட்ட நோய்கள் உருவாகக் காரணங்களாக அமைகின்றன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
பெண்கள், குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்கள், முக்கியப் பங்கு ஆற்றுவதையும் பல்வேறு பொறுப்புகளை வகிப்பதையும் மேற்கோள் காட்டி, இந்த அறிக்கை வீட்டிலும் வேலைபார்க்கும் இடத்திலும் சமமான நிலையை பராமரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
மேலும் இந்த அறிக்கை கூறுவதாவது: தன் சொந்த ஆரோக்கியத்தை அலட்சியம் செய்தல், அவரைச் சுற்றி உள்ளவர்கள் மீது; அவருடைய குடும்பம், வேலை பார்க்கும் இடம் மற்றும் சமூக நெட்வொர்க் ஆகியவற்றின் மீதும் பன்மடங்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கேட்கப்பட்டவர்களில் 77 சதவிகிதம் பேருக்கும் மேல் தாங்கள் முறையான இடைவெளிகளில் தங்கள் ஆரோக்கியத்தைக் குறித்த உடல் பரிசோதனைகளை மேற்கொள்வதைத் தவிர்த்துவிடுவதாகக் கூறுகின்றனர். வீட்டிலும் அலுவலகங்களிலும் ஆற்ற வேண்டிய பணிகளை நேரம் தவறாமல் செய்ய வேண்டிய கட்டாயம், சமூக மற்றும் சொந்தப் பணிகளை ஆற்ற வேண்டியக் கட்டாயம் இவையே தங்கள் ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யும் நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.
மேலும் இந்த அறிக்கை கூறுவது; கேட்கப்பட்டவர்களில் 47 சதவிகிதம் பேர் தங்கள் ஆரோக்கியத்திற்காக வருடத்திற்கு ரூ.500க்கும் குறைவாகவே செலவு செய்வதாகவும், 22 சதவிகிதம் பேர் ரூ.500-5,000 வரை உடல் பருமன், மன அழுத்தம் ஸ்பான்டிலேடிஸ் போன்றவற்றுக்காக செலவு செய்வதாகவும் கூறுகின்றனர்.
பதிலளித்தவர்களில் 29 சதவிகிதம் பேர் ஒரு வருடத்திற்கு ரூ.5000 முதல் 50,000வரை தங்கள் உடல்நலத்துக்காக செலவு செய்வதாகக் கூறுகின்றனர். இப்படி பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் அதிக அல்லது குறைந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய்கள், ஆஸ்த்துமா, சிறுநீரக உபாதைகள் மற்றும் ஆர்த்ரடீஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
ஆதாரம்: assocham

