பொதுச் சேவை மையங்கள் - திட்டம்

பொதுச் சேவை மையங்கள் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு லட்சம் பொதுச் சேவை மையங்களை அமைப்பதற்குத் தேவையான உதவிகளை தேசிய அளவில் வழங்குவதற்காக இந்திய அரசு முனைப்புடன் மேற்கொண்டுள்ள ஒரு திட்டம்.  அரசுத் துறை, தனியார் துறை மற்றும் சமூக நல துறையினரின் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் இந்திய கிராமப் புற மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கச் செய்யும் வகையில் இந்த மையங்கள் செயல்பட வேண்டும் என்ற தொலைநோக்குடன்  2004 - ஆம் ஆண்டு, பொதுச் சேவை மையங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாராத சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தேசத்தின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் கிராமப்பகுதி மக்கள் பலன்பெற ஏதுவாக அரசு, தனியார் மற்றும் சமூகநல அமைப்புகள் தங்களது சமூகநல மற்றும் வர்த்தக ரீதியிலான குறிக்கோள்களை அமைத்துக்கொள்ள வழிவகுக்கக் கூடிய ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதுதான் இந்தத் திட்டத்தின் குறிக்கோள்.

இந்தத் திட்டத்திற்காக நான்கு வருட காலகட்டத்தில் 5742 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  மொத்த செலவில் பெரும்பகுதி தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து திரட்டப்படும்.  எஞ்சிய தொகை தனியார் துறையினரிடமிருந்துத் திரட்டப்படும்.  மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 856 கோடி ரூபாயை மத்திய அரசும் 793 கோடி ரூபாயை மாநில அரசும் வழங்கும்.  அரசு மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் கூட்டாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.  அரசு மற்றும் தனியார் துறையினரின் சேவைகளை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கச் செய்யும் ஆதார மையங்களாக இந்தப் பொதுச் சேவை மையங்கள் செயல்படுகின்றன.

அரசு சேவைகளை எல்லா இடங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் தேசிய இணையவழி அரசு நிர்வாகத் திட்டத்தை திறம்பட நிறைவேற்றுவதற்காக மும்முனை அணுகுமுறையை அரசு மேற்கொண்டுள்ளது.

  • மூன்று தூண்களில் ஒன்றாகத் திகழும் பொதுச்சேவை மையங்கள் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பக்கபலமாக அமைந்துள்ளன.
  • மாநில அளவிலான ஏரியா நெட்வொர்க் வசதி இணைய தொடர்புக்குத் தேவையான உதவியை அளிக்கிறது.  இதற்காக ஏற்கனவே 3334 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மாநில தரவு மையத் திட்டம் புள்ளி விவரங்களைத் திரட்டி பயன்படுத்திக் கொள்ள துணை நிற்கிறது.

பொதுச் சேவை மையங்கள் செய்தி, மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதி கொண்ட சிறு சிறு மையங்களாக உருவாக்கப்படும்.  அவற்றில் ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், யூ.பி.எஸ் போன்ற அடிப்படையான சாதனங்களும் இடம்பெற்றிருக்கும்.  தொலை மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு வசதிக்குத் தேவையான கூடுதல் வசதியாக வயர்லெஸ் தொடர்பும் அந்த மையங்களில் இணைக்கப்பட்டிருக்கும்.

பொதுச்சேவைத் திட்டம் மூன்றடுக்கு அமலாக்க வரையறைகளைக் கொண்டுள்ளது:

  • முதல் நிலை என்பது கிராம அளவிலான தொழில்முனைவு மையங்களாக செயல்படக் கூடியது.  இந்த முதல்நிலை மையம் ஐந்து, ஆறு கிராமங்கள் அடங்கிய ஒரு தொகுப்பில் வசிக்கும் நுகர்வோர்களுக்கு சேவைகளை வழங்கும். ஆனால், தமிழக அரசு ஒவ்வொரு மூன்று கிராமங்களுக்கும் ஒரு பொதுச்சேவை மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இரண்டாவது இடைப்பட்ட நிலையில் செயல்படக்கூடிய சேவை மைய ஏஜென்சி கிராம அளவிலான தொழில்முனைவோர் நெட்வொர்க்கை ஏற்படுத்தி அதை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்ளும்.  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களுக்காக ஒரு சேவை மைய ஏஜென்சி அமைக்கப்படும்.  (ஒரு மாவட்டம் என்பது 100 - 200 சேவை மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும் ).
  • மூன்றாம் நிலை என்பது மாநில அரசால் அமைக்கப்பட்ட ஏஜென்சியாக இருக்கும்.  இந்த ஏஜென்சி அந்தந்த மாநிலத்திற்குள் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்கும்.  தேவையான கொள்கைகளை வகுத்தல், சேவை மைய ஏஜென்சிகளுக்குத் (எஸ்.சி.ஏ) தேவையான அனைத்து விதமான உதவிகளையும் வழங்குதல் ஆகிய பணிகளையும் இந்த அரசு ஏஜென்சி (எஸ்.டி.ஏ)  மேற்கொள்ளும்.

ஆதாரம்: http://www.mit.gov.in/default.aspx?id=825

மேலும் தகவலுக்கு: www.csc-india.org
http://www.mit.gov.in/default.aspx?id=144




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: