|
|
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சேமிக்கப்படும் தானியங்களைத் தாக்கும் பூச்சிகளின் மேலாண்மை
-
|
இக்கருவியில் புதிய முறையினைப் பயன்படுத்தி சேமித்து வைக்கப்பட்டுள்ள
தானியங்களைத் தாக்கும் பூச்சிகளை கண்டுபிடிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன.

அவை, ஒரு முக்கிய குழாய், பூச்சிகளை பிடிக்கும் குழாய் மற்றும் அதனுடன்
பொறுத்தி நீக்கக்கூடியவகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கூம்பு போன்ற அமைப்பு.
முக்கிய குழாயில் 2மிமீ விட்டத்திற்கு சம இடைவெளியில் துளைகள்
இருக்கும்.
கருவி செயல்பாட்டின் அடிப்படை
பூச்சிகள் காற்றை மிகவும் விரும்பும். எங்கு காற்று வருகிறதோ
அப்பகுதியை நோக்கி அவை செல்லும். பூச்சிகளின் இந்த பழக்கம்
இக்கருவி செயல்படுவதற்கு முக்கிய கருவாக இருக்கிறது.
வேலை செய்யும் முறை
படத்தில் காட்டியவாறு இக்கருவியினை, செங்குத்தாக, இதன் வெள்ளை
கூம்பு போன்ற பகுதி கீழே இருக்குமாறு, கோதுமை, அரிசி போன்ற சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் தானியங்களில் வைக்கவேண்டும். இதன் மேலுள்ள
சிவப்பு நிற மூடி தானியங்களின் மேல்மட்டத்திற்கு இணையாக இருக்குமாறு
வைக்கவேண்டும். இவ்வாறு வைத்திருக்கும்போது தானியங்களிலுள்ள பூச்சிகள்
காற்று வரும் பகுதியான முக்கிய குழாயிலுள்ள துளைகளுள் செல்லுகின்றன.
இவ்வாறு செல்லும் போது அவை கூம்பு வடிவிலான அடிப்பகுதியில்
விழுந்துவிடும். இவ்வாறு விழுந்தவுடன் பூச்சிகளால் வெளியே செல்லமுடியாது,
பிடிக்கப்பட்டுவிடும். ஒரு வாரத்திற்கு ஒருமுறை இக்கருவியினை
தானியத்திலிருந்து எடுத்து அதன் அடிப்பகுதியான கூம்பில்
சேகரிக்கப்பட்டிருக்கும் பூச்சிகளை அழித்துவிட வேண்டும்.
இக்கருவியின் சிறப்பம்சம்
இரசாயனங்கள் உபயோகிக்காத, பக்கவிளைவுகள் ஏதுமில்லாத, பராமரிப்பு செலவு
இல்லாத பூச்சிகளை அழிக்கும் திறன் கொண்டது இக்கருவி.
இக்கருவியின் பூச்சிகளை பிடிக்கும் திறன்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சிகளை கண்டறியும் கருவிகள்
உணவு தானியங்கள், மற்றும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில்
ரைசோபெர்த்தா டொமைனிக்கா (Rhyzopertha dominica.),ஸைட்டோபைலஸ் கிரைசே
மற்றும் டிரைபோலியம் கேசடேனியம் (Sitophilus cryzae (L.) and Tribolium
castaneum (Herbst)) போன்ற பூச்சிகளை கண்டுபிடிக்கவும் மற்றும் அவற்றை
பிடிக்கவும் மிகத்திறன் வாய்ந்த கருவிகளாகும். இக்கருவிகளின் பூச்சிகளை
கண்டுபிடிக்கும் விகிதம், வழக்கமான மாதிரி முறைகளுடன் ஒப்பிடும் போது, 2
:1 முதல் 31 :1 வரை இருக்கிறது. மேலும் இக்கருவிகளில் பூச்சிகளை
பிடிக்கும் திறனும், வழக்கமான முறைகளுடன் ஒப்பிடும் போது 20 : 1
முதல் 121 :1 ஆக இருக்கிறது.
இக்கருவிகளை 2-3/25 கிலோ தானியக்கூடைகளில் (28 செ.மீ விட்டமும், 39
செமீ நீளமும்) உபயோகிக்கும் போது பூச்சிகளை கூட்டமாக பிடிக்கும்
திறனுடையவை. ஆனால் இக்கருவிகள் தானியங்களின் முதல் 6 அங்குல உயரத்தில்
வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தானிய சேமிப்பின் ஆரம்ப காலத்தில்
பூச்சிகளின் தாக்கம் இப்பகுதிகளில் அதிகமாக இருக்கும். இக்கருவிகள் 80
சதவிகிதத்திற்கும் அதிகமான பூச்சிகளை 10-20 நாட்களில் நீக்கிவிடும்.
|
|
-
|
தானியங்களின் மேற்பரப்பிலுள்ள மற்றும் அதன் இதர பகுதிகளில்
உள்ள பூச்சிகளை பிடிக்க குழி வடிவ பொறி உதவுகிறது. (பூச்சிகளை
கண்காணிக்கவும் மற்றும் மொத்தமாக பிடிக்கும் கருவி)
சாதாரண குழிபொறியின் வடிவம்

- குழி வடிவ பொறியில் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒன்று ஓட்டையையுடைய (2
மிமீ அல்லது 3 மிமீ) மூடி, மற்றும் கூம்பு வடிவிலான அடிப்பகுதி
- கூம்பு வடிவ பகுதியின் உள்பகுதியில், ஒட்டும் திறனுடைய ஒரு பொருள்,
பூச்சிகளை பிடிப்பதற்காக பூசப்பட வேண்டும்.
- ஆனால் இம்முறையினை பின்பற்றுவது மிகவும் சிரமம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் குழி வடிவ பொறி
மாதிரி

- இம்மாதிரியில் ஓட்டையிடப்பட்ட மூடி, கூம்பு வடிவ அடிப்பாகத்துடன்
சரிவான புனல் வடிவ பூச்சி பிடிக்கும் குழாயுடன்
இணைக்கப்பட்டிருக்கும்
- எனவே ஒட்டும் தன்மையுடைய பொருள் தேவையில்லை
- வணிகரீதியாக வடிவமைக்கப்பட்ட மாதிரி பிளாஸ்டிக்கினால் எளிதாக, விலை
குறைவாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் (ஒரு பொறியின் விலை ரூ.25
மட்டும்)
- எளிதில் கையாளுமாறு இருக்கும்
|
|
-
|
இந்த பொறியில், ஓட்டையிடப்பட்ட குழாய், குழியில் பூச்சிகள் விழும்
முறையில் அமைக்கப்பட்ட ஒரு சேகரிக்கும் குழாய், கூம்பு வடிவ குழி வடிவ
பொறியுடன் ஒட்டையிடப்பட்ட மூடி, பின் அதன் அடிப்பகுதியில் சரிவான கூம்பு
வடிவ அமைப்பு போன்றவை ஒரே கருகியாக அமைக்கப்பட்டிருக்கும். எனவே,
இக்க்ருவியால் பூச்சிகளை கவர்ந்து அழிக்கும் திறன் அதிகமாகிறது. பயறுவகை
தானியங்களைத் தாக்கும் பூச்சிகள் அவற்றின் மீது அங்குமிங்கும் 
ஊர்ந்து கொண்டிருக்கும். எனவே பூச்சிகளை பிடிப்பதற்கு முன்பு குழி வடிவ
கூம்பின் மீது ஒட்டும் தன்மையுடைய பொருட்களை தடவ வேண்டிய அவசியமில்லை.
இப்பொறியில், பூச்சிகள் உயிருடன் இப்பொறியில் பிடிக்கப்பட்டு, அவற்றின்
மூலம் வெளிவரும் இனக்கவர்ச்சி திரவத்தின் மூலம்
அதிகமாக பூச்சிகளை பிடிக்க முடியும்.
|
|
-
|
இதில் ஒரு கூம்பு வடிவ துளையிடப்பட்ட ஒரு கிண்ணத்துடன் (3 மிமீ
விட்டமுடைய துளை) ஒரு மூடி இணைக்கப்பட்டிருக்கும். இந்த கிண்ணம்,
பூச்சிகளை பிடித்து வைக்க சிறு பாத்திரம் மற்றும் ஒரு வட்டவடிவிலான
தட்டின் மேல் வைக்கப்பட்டிருக்கும். வாசலின் போன்ற ஒட்டும் தன்மையுடைய
பொருள், இத்தட்டு மற்றும் பூச்சி தக்கவைக்கும் பாத்திரம் ஆகியவற்றில்
தடவப்பட்டிருக்கும்.

விவசாயிகள், பயறு வகை தானியங்களை சேமித்து வைக்கும் போது 200 கிராம்
அளவுக்கு இத்தானியங்களை எடுத்து பொறியிலுள்ள கிண்ணத்தில் போட வேண்டும்.
பூச்சிகள் உருவாக ஆரம்பிக்கும்போது அவற்றின் அலையும் தன்மையினால் அவை
பொறியிலுள்ள துளைகளின் வழியாக, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள குழி வடிவ
பொறியில் விழுந்துவிடும். பூச்சிகள் ஒட்டிக்கொண்டதை வைத்து,
விவசாயிகள் பூச்சிகள் இருப்பதைக் கண்டறிந்து, அதிக அளவில் சேகரித்து
வைத்துள்ள தானியங்களை வெயிலில் காயவைக்கலாம். இப்பொறியில் 2 மிமீ
விட்டமுள்ள துளையினை அமைத்தால், தானியங்களுக்கு உபயோகிக்கலாம்
|
|
-
|
இந்த பூச்சிகளை நீக்கும் அமைப்பு பூச்சிகளை தானாகவே நீக்கி விடும்.
இந்த அமைப்பில், நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன. அவையாவன, வெளிப்புற
பெட்டி, உட்புற ஒட்டையிடப்பட்ட பெட்டி, பூச்சிகளை சேகரிக்கும் பாத்திரம்
மற்றும் மூடி. இந்த கருவியிலும், பூச்சிகளின் அலையும் தன்மை மற்றும்
காற்று இருக்கும் இடத்திற்கு செல்லும் தன்மையினை வைத்தும் அவற்றை
பிடிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தானியங்கள் துளையிடப்பட்ட உள்
பெட்டியினுள் வைக்கப்பட்டிருக்கும். உட்புற மற்றும் வெளிப்புற
பெட்டிகளுக்கு நடுவில் இருக்கும் இடம் பூச்சிகளுக்கு நல்ல காற்றோட்டத்தைக்
கொடுக்கிறது. பூச்சிகள் அலையும் போது துளைகளுக்குள் நுழைந்து காற்றோட்டம்
அதிகமான இரண்டு பெட்டிகளுக்குமிடையிலுள்ள இடத்தை நோக்கி நகரும். அப்போது,
பூச்சிகளை சேகரிக்கும் பெட்டியினுள், அவற்றின் குழிவடிவத்தால்
விழுந்துவிடுகின்றன. பூச்சிகளை தானியங்களிலிருந்து வரும் போதே விரைவாக
சேகரிப்பதற்கு உட்புறப் பெட்டியில் 2மிமீ அளவுக்கு துளையிடப்பட்ட
குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த கருவி அரிசி, கோதுமை, உடைத்த பயறு வகைகள், கொத்துமல்லி போன்றவற்றை
சேமித்து வைக்க உதவும். இந்தக் கருவியில் தானியங்களை சேமித்து வைக்கும்
போது, சேமித்து வைக்கும் தானியங்களை அதிகம் தாக்கும்
பூச்சிகளான, அரிசி கூன்வண்டு, தானியங்களை ஓட்டை போடும் பூச்சி,
சிவப்பு மாவு பூச்சி, போன்ற பூச்சிகள், தானாகவே
நீக்கப்பட்டுவிடுகின்றன. மிகவும் குறைந்த கால அளவான 10 நாட்களுக்குள்
அதிகப்பட்சமாக 90 சதவிகித பூச்சிகள் தானியங்களிலிருந்து நீக்கப்பட்டு
விடுகின்றன. இத்தகைய அமைப்புகள் 2, 5, 25, 100 மற்றும் 500 கிலோ வடிவில்
கிடைக்கின்றன.
திறன்
இக்கருவியில் சேமித்துவைக்கப்பட்டுள்ள தானியங்களில் (நெல் மற்றும்
சோளம்) (100 – 500 கிலோ), பத்து மாதங்களாக பிறகு, 1-4%
பூச்சிகளால் சேதாரம் இருந்தது. மற்ற சேகரிக்கும் கலன்களில் சேமித்து
வைக்கப்படும் போது, 33-65 சதவிகித சேதாரம் ஏற்பட்டுகிறது. பத்து
மாதங்களாக சேகரிக்கும் கலன்களில் வைக்கப்பட்டுள்ள தானியங்களில், ஒரு கிலோ
தானியத்திற்கு, 5-191 பூச்சிகள் என்ற அளவிலும், இக்கருவியில்
சேமித்துவைக்கப்பட்ட தானியத்தில் 0-2 பூச்சிகள் என்ற அளவிலும்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
|
|
-
|
இக்கருவியில் புற ஊதாக்கதிர்களை வெளியிடும் 4 வாட்ஸ் திறனுடைய ஒரு
விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். இந்த விளக்கு 250 நேனோ மீட்டர்
அலைநீளமுடைய புற ஊதாக்கதிர்களை அதிகப்பட்சமாக வெளியிடும். இந்த விளக்கு
மேல்பகுதியில்310 மிமீ விட்டமும் அடிப்பகுதியில் 35 மிமீ விட்டமுமுடைய ஒரு
புனலின் மையத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த புனலின் அடிப்புறத்தில்
ஒரு கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பெட்டி அல்லது கலன் பூச்சிகளை பிடிப்பதற்கு
இருக்கும். தேவைப்பட்ட இடங்களில் இந்தக் கருவியினை தொங்கவிடுவதற்காக
மூன்று கொக்கிகள் புனலின் வெளிப்புறத்தில் இருக்கும். இந்தக் கருவியுடன்
மூன்று கால்களையுடைய ஒரு ஸ்டேண்டும் இருக்கும்.
தானியங்களை சேமித்துவைக்கும் கிடங்குகளின் மூலையில்
நிலமட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் இக்கருவி
தொங்கவிடப்பட்டிருக்கும். ஏனெனில் பூச்சிகள் சாயங்கால நேரங்களில்
சேமிப்புக்கிடங்கின் மூலைக்கு செல்லும் குணமுடையவை. இக்கிடங்குகளில்
இப்பொறி இரவு நேரங்களில் இயக்கப்படுகிறது. இந்த விளக்கு பொறி நெல்லைத்
தாக்கும் பூச்சிகளான தானியங்களை ஓட்டை போடும் பூச்சி (Rhyzopertha
dominica), சிவப்பு மாவு பூச்சி (Tribolium castaneum), ரம்ப்பல் பூச்சி
(Oryzaephilus surnamensis) போன்றவற்றை அதிகம் பிடிக்க உதவுகிறது.
இதுமட்டுமன்றி சோசிட்ஸ் எனப்படும் சேகரிக்கும் கிடங்குகளில் அதிகமாக
தொல்லை ஏற்படுத்தும் பூச்சிகளும் இக்கருவியினால் அதிக அளவில்
ஈர்க்கப்பட்டு பிடிக்கப்படுகின்றன. அறுபது மீட்டர் நீளமும் 20 மீட்டர்
அகலமும் மற்றும் 5 மீட்டர் உயரமுடைய கிடங்குக்கு 2 புற ஊதாக்கதிர்
விளக்குகள் தேவைப்படும்.

இப்பொறி அதிக நாட்களுக்கு தானியங்களை சேகரிக்கும் கிடங்குகளுக்கும்,
ஏற்கெனவே பூச்சி தாக்குதலுக்குள்ளான தானியங்களிலுள்ள அதிக
எதிர்ப்புத்திறனுடைய பூச்சிகளை பிடிப்பதற்கும் உதவுகின்றன. அடிக்கடி
தானியங்களை சேகரித்து பின்பு மாற்றும் கிடங்குகளில் இப்பொறிகள் பூச்சிகளை
கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
வேலை செய்யும் திறன்
60 மீ நீளமும் 20 மீட்டர் அகலமும் 5 மீ உயரமுடைய ஒரு கிடங்கில் மற்ற
பரிசோதனைகளில் பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதே
கிடங்குகளில் இக்கருவியினை உபயோகிக்கும்போது ஒரு நாளைக்கு 200 பூச்சிகள்
இக்கருவியின் மூலம் பிடிபட்டன. இதன் மூலம் இதன் திறன் வெளிப்படும். ஒரு
நெல் சேமிப்புக்கிடங்கில் ஒரு கருவியின் மூலம் ஒரு நாளில் 3000
ரைசோபெர்த்தா டொமைனிக்கா எனும் பூச்சி பிடிக்கப்பட்டுள்ளது.
|
|
-
|
பயறுவகை தானியங்கள் இதர தானியங்களை விட அதிகம் அவற்றைத் தாக்கும்
கேலோசோபிரக்கஸ் எனும் பூச்சிகளால் சேதாரத்திற்குள்ளாகின்றன.
இப்பூச்சியானது வயல்வெளிகளிலிருந்து சேமிக்கப்படும் இடம் வரை பயறு வகை
தானியங்களில் அதிக சேதாரத்தினை ஏற்படுத்துகின்றன. இப்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் இப்பூச்சியின் முட்டைகளை
கண்டுபிடித்து நசுக்குவதன் மூலம் இப்பூச்சிகளின் தாக்கத்தினை
சேமித்துவைக்கப்பட்டுள்ள பயறுவகை தானியங்களில் குறைக்கலாம்.
இக்கருவியில், ஒரு வெளிப்புற பெட்டி மற்றும் உட்புறத்தில்
துளையிடப்பட்ட ஒரு பெட்டி, அதில் சுற்றிலும் பிரஷ் போன்ற அமைப்புடன்
கூடிய நீண்ட கம்பியும் இருக்கும். துளையிடப்பட்டுள்ள
பெட்டியில், தானியங்களை வைக்கவேண்டும். பின்னர் பிரஷ்
அமைப்புடன் கூடிய கம்பியினை கடிகார திசையில் 10 முறையும் கடிகாரத்திற்கு
எதிர் திசையில் 3 முறையும் (காலை, நண்பகல், பிற்பகல்) சுற்றவேண்டும்.
பிரஷ் அமைப்பின் செயல்பாட்டால், இப்பூச்சிகளின் முட்டைகள் நசுக்கப்பட்டு
தானியங்களின் சேதாரம் தடுக்கப்படுகிறது. இம்முறையினை உபயோகப்படுத்துவதன்
மூலம், தானியங்களின் முளைக்கும் திறன் பாதிக்கப்படுவதில்லை.

இக்கருவியின் நன்மைகள்
- இக்கருவி உபயோகிப்பதன் மூலம் தானியத்தின் முளைவிடும் தன்மை
பாதிக்கப்படுவது இல்லை
- ஒருமுறை பூச்சிகளின் முட்டைகள் நீக்கப்பட்டுவிட்டால் பின்பு
தானியங்களை சேமிக்கும் போது மீண்டும் பூச்சிகள் உருவாவது
தடுக்கப்படுகிறது.
- பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதன் மூலம் தானியங்களை சேமித்துவைக்கும்
போது அதிகரிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது
- இப்பூச்சியின் தாக்குதலுக்கு பயந்து, பொதுவாக விவசாயிகள் பயறுவகை
தானியங்களை சேமித்து வைப்பதில்லை. இக்கண்டுபிடிப்பின் மூலம்
விவசாயிகளின் பயத்தினை நீக்கி அவர்கள் தங்களது தானியங்களையே விதைகளாக
பயன்படுத்திக்கொள்ள ஏதுவாகிறது
- இந்த கண்டுபிடிப்பு காப்புரிமை பெறப்பட்டு, வணிக ரீதியாக உற்பத்தி
செய்யப்படுகிறது
|
|
-
|
இக்கருவி மூலம் மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள
தானியங்களில் பூச்சிகளின் தாக்குதலை கண்டுபிடிக்க உதவுகிறது. இக்கருவியில்
1.8 – 2.0 செ.மீ விட்டமுடைய, 1.8 -2 மிமீ துளையிடப்பட்டும் உள்ள ஒரு
குழாய் உள்ளது. அக்குழாயின் ஒரு முனையில், வளைந்து காணப்படும். இந்த
வளைந்த பகுதியுடன், பூச்சி சேகரிக்கும் கலனும் இணைக்கப்பட்டிருக்கும்.
முக்கிய குழாயின் மற்ற முனை மூடப்பட்டிருக்கும்.

இக்கண்டுபிடிப்பின் நன்மைகள்
- உணவு தானிய சேமிப்புக்கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தானிய
மூட்டைகளில், மூட்டைகளுக்கு சேதம் ஏற்படாமல் பூச்சிகள் இருப்பதை
கண்டுபிடிக்க இக்கருவி உதவுகிறது
- இக்கருவிக்கு பூச்சிகளை பிடிக்க பொறி போன்ற பொருட்கள் தேவையில்லை
- மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு அடுக்குகளிலுள்ள
தானியங்களில் ஏற்பட்டுள்ள பூச்சிகளின் தாக்குதலை இக்கருவியின் மூலம்
கண்டறியலாம்
- புகைமூட்டப்பட்ட பல்வேறு அடுக்கு தானியங்களில் புகைமூட்டப்பட்ட திறனை
கண்டுபிடிக்க இக்கருவி உதவுகிறது
- விவசாயிகள் தானியங்களை மூட்டைகளில் சேகரிக்கும் போது, இக்கருவி
பயன்படும்.
|
|
-
|
பொது விநியோகத்திற்காக, உணவு தானியங்கள் நிறைய நாட்களுக்கு
சேமித்துவைக்கப்படுகின்றன. உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களால்
தானியங்களின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்படும் சேதாரத்தில் பூச்சிகள்
முக்கியபங்கு வகிக்கின்றன. சேமிப்பு கிடங்குகளில் பூச்சிகள் பறக்கும்
போதும், தானியங்களின் மீது ஊறும் போதும் அவற்றின் தாக்குதல்
தெரியவருகிறது. இச்சமயத்திற்குள், தானியங்களின் மீது அதிக தாக்குதலை
பூச்சிகள் ஏற்படுத்தியிருக்கும். எனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள
தானியங்களில் அதிக இழப்பினைத் தடுக்க, பூச்சிகளின் தாக்குதலை சரியான
சமயத்தில் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமாகும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பூச்சிகளின் அலையும் தன்மையினை
பயன்படுத்தி, சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் அவை இருப்பதை
கண்டுபிடித்து கட்டுப்படுத்த பல்வேறு கருவிகளை வடிவமைத்துள்ளது.
அவையாவன

- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சிகளை கண்டறியும்
கருவி
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் குழி வடிவ பொறி
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இரண்டு
செயல்பாடுகளையுடைய பொறி
- பூச்சிகளை கண்டறியும் கருவி
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தானியங்கி பூச்சி நீக்கும்
அமைப்பு
- புறஊதா கதிர் மூலம் வேலை செய்யும் தானிய கிடங்குகளில்
உபயோகப்படுத்தப்படும் பொறிகள்
- சேமித்து வைக்கப்பட்டுள்ள பயறுவகை தானியங்களிலுள்ள பூச்சிகளின்
முட்டைகளை நீக்கும் கருவி
- சேமிப்பு கிடங்குகளில் சேமித்துவைக்கப்பட்டுள்ள பொருட்களில் பூச்சிகளை
கண்காணிக்கும் கருவி
இக்கருவிகள் பல இடங்களில் பரவலாக உபயோகப்படுத்தப்படுத்தப்படுவது
மட்டுமன்றி மாநில மற்றும் தேசிய அங்கீகாரத்தினை பெற்றுள்ளன.
எனவே வேளாண் பூச்சியியல் துறை, தாவர பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மேற்கூறிய கருவிகள் அனைத்தும் கொண்ட
தொகுப்பு ஒன்றை ஏற்படுத்துயுள்ளது. இக்கருவிகளைப் பற்றியும் அவற்றை
உபயோகிக்கும் முறை பற்றியும் கொண்ட ஒரு குறுந்தகடு ஒன்றையும்
வெளியிட்டுள்ளது. இவை தொழில் நுணுக்கத்தினை நாடு முழுவதும் பிரபலமடைய
உதவிடும். இத்தொகுப்பு கல்வி, விரிவாக்கமையங்கள் (வேளாண் அறிவியல் மையம்,
வேளாண் ஆலோசனை நிலையங்கள், தானியங்களை பாதுகாக்கும் மையங்கள்), தனியார்
சேமிப்புக்கிடங்குகளில் செயல் முறை விளக்கமளிக்கவும் ஒரு உபயோகமான
உபகரணமாகும்.
|
|
மூலம்:www.ppqs.gov.in
|
|